சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகத்தினரால் திட்டமிடப்பட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. அதன் பின் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக விழா நடைபெறாமல் இருந்தது. இதினிடையே ராஜ கோபுரம், பரிவார சுவாமிகளின் சன்னதிகளின் விமானங்கள், கோயிலின் தரைதளம் சீரமைப்பு, சுற்றுச்சுவர் சீரமைப்புப் பணிகள் உள்பட ரூ.1 கோடி மதிப்பில் செய்யப்பட்டன.
சுகவனேசுவரர் கோயில் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் சென்ற செப்.1 ஆம் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தினமும் ஐந்து காலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சோம கும்ப பூஜை, ஆறாம் கால பரிவார சுவாமிகளுக்கு யாக பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு அனைத்து பரிவார கலசங்கள் புறப்பாடு, காலை 6.30 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு, காலை 9.30 மணிக்கு அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சுவாமி, அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.