ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூரில் கடந்த 7ஆம் தேதி இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சோகனூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன், செம்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலாகிருஷ்ணன், “திட்டமிட்டு சாதிய ரீதியில் நடைபெற்ற இரட்டைக்கொலையை வன்மையாக கண்டிக்கிறோம். சாதிய வன்மம் கொண்டவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய வன்மத்தை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டும். குற்றவாளிகளை யாரும், எந்த விதத்திலும் பாதுகாக்க கூடாது. இது போன்ற வழக்குகள் முறையாக நடத்தப்படாததால், கடைசியில் குற்றவாளிகள் தப்பிவிடுகிற செய்தியே வெளிவருகிறது.
காவல்துறை பொறுப்புணர்வோடு, கடமை உணர்வோடு சாதிய வன்முறை வழக்குகளை நடத்துவது இல்லை. மூன்று மாத காலத்திற்குள் வழக்கு முடிவு பெற்றால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. ஆனால், காவல்துறையும் குற்றவாளிகளும் சேர்ந்துகொண்டு வழக்குகளை பல ஆண்டுகள் நீட்டித்த காரணத்தினாலே குற்றவாளிகள் தப்பித்துவிடுகின்றனர்.