நாக்பூரில் நடைபெறக்கூடிய தம்மச்சக்கர பரிவர்த்தனை இந்த ஆண்டு கரோனா வைரஸ் காரணமாக அதிகளவில் பங்கேற்க வேண்டாம் என கூறியதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் நேற்று (அக். 25) இதில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ‘64 ஆம் ஆண்டு பவுத்தம் எழுகிறது’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
அதற்கு பின்பு பேசிய அவர், மனுதர்ம நூலில் குறிப்பிட்டதை தான் நான் சுட்டிக்காட்டினேன். ஆனால் தவறாக சித்தரித்து காட்டப்படுகிறது. வரும் செவ்வாய்க்கிழமை (அக். 27) பாஜக மகளிர் அமைப்பு சார்பில் எனக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக நாம் கட்சியைச் சேர்ந்த பெண்கள் யாரும் போராட்டம் நடத்த வேண்டாம் என கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “நீட் தேர்வில் இட ஒதுக்கீடு தமிழ்நாடு மாணவர்களுக்கு என 10 சதவீத இட ஒதுக்கீடை ஏற்படுத்தாமல் ஏன் 7.5 சதவீதம் என அமைத்தார்கள் என முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அதிமுக தரப்பில் பல்வேறு சுவரொட்டிகள் திமுகவுக்கு எதிராக வெளியிடப்படுகிறது. இது முதலமைச்சர் தெரிந்தே நடக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தொல். திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு மேலும் பேசிய அவர், நான் ஒருவேளை பிரதமராக அமர வாய்ப்பு இருந்தால் என்னுடைய முதல் கையெழுத்து மனுதர்ம நூலை தடைசெய்யும் கையெழுத்தாக அமையும். தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டாலும், திமுக கூட்டணி தான் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க...ஆதாரில் மாநில மொழிகள் புறக்கணிப்பு: கனிமொழி கண்டனம்