தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகேதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசு மறைமுகமாக துணை போகிறது - பி.ஆர்.பாண்டியன்

கர்நாடக மாநிலம், மேகேதாட்டுவில் அணை கட்டுவவதற்கு ஒன்றிய அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

By

Published : Aug 31, 2021, 8:10 PM IST

ராமநாதபுரம் :கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர் மலைச்சாமி குடும்பத்தினருக்கு ஆறுதல்கூற, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசு சட்ட விரோதமாக மேகேதாட்டுவில் அணை கட்டி, தமிழ்நாட்டை அழிப்பதற்கு, ஒன்றிய அரசு மறைமுகமாக துணை போகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை தன்வசப்படுத்த, ஒன்றிய அரசு சதி செய்து வருகிறது. அதன் அடிப்படையில்தான் ஜல்சக்தி துறை அமைச்சர் இன்று (ஆக.31) நடக்கக்கூடிய விவாதம், சென்ற வாரமே நடைபெறும் என அறிவிப்புச் செய்திருக்கிறார்.

காவிரி பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கின்றபோதும்; அதைப் பற்றிய விவாதத்தை இன்று நடத்துவோம் என ஜல்சக்தித்துறை அமைச்சர் அறிவித்ததாக கர்நாடகத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்திருப்பது மத்திய அரசின் துரோகத்தை வெளிப்படுத்துகிறது.

இதுகுறித்து காவிரி மேலாண்மை வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு முடிவு கட்ட தமிழ்நாடும் பாண்டிச்சேரியும் இணைந்து கேரளத்திடம் ஆதரவு கோர வேண்டும்.

நேற்றைய தினம் தமிழ்நாட்டு விவசாயிகளோடு இணைந்து மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாட்டிற்கு ஆதரவு தருவோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கேரள முதலமைச்சரின் ஆதரவைக் கோர வேண்டும்.

கருவேல மரங்களை வெட்ட வேண்டும்

மேகேதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசு மறைமுகமாக துணை போகிறது

வைகைக்கு அணைக்குக்கீழே 45 மீட்டர் வரை கருவேல மரங்கள் மண்டி இருக்கின்றன. இதனால் நீர் ஆதாரங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இதை உடனடியாக சரி செய்து, மணல் திருட்டையும் தடுத்து நிறுத்தி, வைகையின் கடைமடைப் பகுதியான ஆர்.எஸ்.மங்கலம் பகுதிவரை, நீர் வந்து சேர்வதை அரசு உறுதிபடுத்த வேண்டும்.

வைகை அணையில் இருந்து எப்போதெல்லாம் நீர் திறக்கப்படும், எந்தெந்த பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என்று புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டு அதனை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த 2020-2021ஆம் ஆண்டில் காப்பீடு செய்திருந்த நெல், மிளகாய் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை தற்போது வரை வழங்கப்படாமல் இருக்கிறது. அந்தத் தொகையை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது வறண்டப் பகுதிகளில் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான திட்டம்.

இது பாசனத்திற்காக விரிவு படுத்தப்படுகிறது என கர்நாடக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு உண்மையை உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துக் கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும்

தமிழ்நாட்டில், அண்டை மாநிலங்களுடன் இருக்கும் நீர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு சட்ட வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே இருக்கக்கூடிய காவிரி தொழில்நுட்பக் குழுவிற்கு சட்டப்புலமை வாய்ந்த வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.

சட்ட வல்லுநர்கள் மற்றும் நீரியல் துறை அலுவலர்கள் அடங்கிய தனிக்குழு ஒன்றை நியமித்து நீர் பிரச்னை வரும்போது அதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகள் ஆக 174 வகைகள் உள்ளன என நெல் ஜெயராமன் ஏற்கனவே கண்டுபிடித்து, அதனை தமிழ்நாடு அரசும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

அதேபோல் கீழடியில் கிடைக்கப் பெற்ற 20 நெல் மணிகளையும் ஆராய்ந்து மேலும் நெல் மணிகள் இருக்கின்றதா என ஆராய்ந்து அந்த வகைகளை மீட்டெடுப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கனிமவளங்கள் கடத்தலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details