ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப் பாக்கம் அடுத்த மின்வாரிய அலுவலகம் அருகே சுமார் 40 வயது மதிக்கத் தக்க ஆண் சடலம் ஒன்று முழு நிர்வாணமாக இருப்பதாக காவேரிப் பாக்கம் போலீசாருக்கு இன்று (டிச 24) காலை தகவல் கிடைத்துள்ளது.
கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், காவேரிப்பாக்கம் காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் போலீசார் சிலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும், ராமாபுரம் பகுதியிலிருந்து திருப்பாற்கடல் செல்லும் சாலையில் உள்ள கரும்பு தோட்டத்தின் அருகே முழு நிர்வாணமாக உயிரிழந்த நிலையிலிருந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையில் தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் இருந்தது தெரிய வந்ததாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் சரவணன் (45) என்பதும் இவர் கிடைத்த வேலையைச் செய்து தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் தனது அன்றாடம் வாழ்க்கையை சாதாரண முறையில் வாழ்ந்து வரும் இருளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் இவர் நேற்று (டிச 23) கூலி வேலை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தில் மது அருந்திவிட்டு அதிக மது போதையிலிருந்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த சரவணனின் மனைவி மற்றும் சரவணன் உயிரிழப்பதற்கு முன் அவருடன் மது அருந்திய அவரது உறவினரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உயிரிழந்த சரவணனுக்கும் அவரது உறவினருக்கும் மது போதையில் ஏதாவது தகராறு ஏற்பட்டு அதில் தாக்கப்பட்டதால் சரவணன் உயிரிழந்தாரா? அல்லது விபத்து ஏதாவது ஏற்பட்டு உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் இந்த சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் ஐடி பெண் ஊழியர் எரித்துக்கொலை.. போலீசார் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!