ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே நாட்டு பட்டாசு வெடித்து நான்கு வயது சிறுமி உயிரிழந்த வழக்கில், குழந்தையின் பெரியப்பா மீது இரண்டு பிரிகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் உடலுக்கு ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் ரமேஷ்(28). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அஸ்வினி(25) இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில், 4 வயதில் நவிஷ்கா(4)என்ற பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளன.
இந்நிலையில், ரமேஷ் மாம்பாக்கத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டி கொண்டிருந்தபோது, ரமேஷின் அண்ணன் விக்னேஷ்(31) ஒத்தவெடி எனப்படும் நாட்டு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் விக்னேஷின் வலது கையில் ஊதுவத்தியும் இடது கையில் சிறுமி நவிஷ்காவை பிடித்தவாறு கையில் நான்கிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட நாட்டு பட்டாசு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, விக்னேஷ் ஒரு பட்டாசை பற்ற வைத்துவிட்டு உடனடியாக திரும்பியபோது, கையில் இருந்த ஊதுவத்தி மற்றொரு கையில் பிடித்து இருந்த பட்டாசில் பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கையில் வைத்திருந்த ஐந்து பட்டாசுகள் ஒரே நேரத்தில் வெடிக்க தொடங்கியது. இதில் கையில் இருந்த சிறுமிக்கு மார்பு மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதோடு விக்னேஷின் நான்கு விரல்கள் வெடித்து சிதறின.
இதையும் படிங்க:போதையில் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்து இளைஞர்கள் அட்டூழியம்.. வைரலாகும் வீடியோ..!
இதனை அடுத்து காயமடைந்த இருவரையும் அவர்களது உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள செய்யார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும், காயமடைந்த விக்னேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த துயரமான சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த வாழைப்பந்தல் போலீசார் நாட்டு பட்டாசு வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விக்னேஷ் அஜாக்கிரதையாக பட்டாசு வெடித்து சிறுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக கூறி 304A, 338 (அஜாக்கிரதையாக மரணம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கான விபத்து ஏற்படுத்தியது, கொடுங்காயம் ஏற்படுத்தியது) ஆகிய இருபிரிவின் கீழ் வழக்கு வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வாழைப்பந்தல் போலீசார் நாட்டு பட்டாசுகள் எங்கிருந்து பெறப்பட்டது? என்பவன குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிறுமியின் உடல் செய்யார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் மாம்பாக்கம் கொண்டுவரப்பட்டது. அப்போது சிறுமியின் உடலை கண்ட அப்பகுதியினர் கதறி அழுத்த காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் உயிரிழந்த சிறுமியின் உடலுக்கு நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க:ராணிப்பேட்டை அருகே நாட்டு பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு!