ராணிப்பேட்டை:அரக்கோணத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நெடுஞ்சாலைத் துறையினர் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் - சோளிங்கர் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தார் சாலையில் நேற்று (ஆக.29) திடீரென 2 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பள்ளம் ஏற்பட்ட பகுதியானது சிறிய வளைவான பகுதியாகும் இதனால் அரக்கோணம் பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இந்த சாலையில் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் கடும் அச்சத்துடன் பயணம் செய்வதாக வேதனை தெரிவித்தனர்.
அதேபோல், திருத்தணியில் இருந்து அரக்கோணம் பேருந்து நிலையம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களும் இந்த சாலையைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.