ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (60). விவசாயியான இவர் அதே பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வராஜ், முனிசாமி, ரகுநாதன் என்று மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனது பூர்விக சொத்தான 10 சென்ட் அளவு வீட்டை, அவரது 3 மகன்களுக்கும் சரிசமமாகப் பங்கிட்டு தர முடிவு செய்துள்ளார்.
இதற்காக, அவர் கடந்த ஏப்ரல் 31ஆம் தேதி கலவையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்ற போது, நிலத்தை பார்வையிட்டு பதிவு செய்து கொடுக்க மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணமாக சார்பதிவாளர் ரமேஷ் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அதற்கு முன்பணமாக ரூபாய் பத்தாயிரத்தை, அவரது அலுவலகத்தில் இடைத்தரகர் வேலு என்பவர் மூலமாக பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.