உயிரிழந்த தந்தை - அப்பாவின் கனவை நிறைவேற்ற 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி! ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பிள்ளையார் கோயில் தெருவைச்சேர்ந்தவர், துளசி - அருணா தம்பதி. இவர்களுக்கு கிருத்திகா (15), அமர்நாத் (13), வாசுகி (11) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். துளசி அப்பகுதியில் லாரி உரிமையாளராகத் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் துளசியின் மூத்த மகள் கிருத்திகா தற்போது அப்பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கிருத்திகா நவல்பூர் பகுதியில் உள்ள கிரேஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதி வருகிறார்.
இன்று அவருக்கு கணிதம் தேர்வு எழுதுவதற்கு காலை வீட்டிலிருந்து தயாராகி கொண்டிருக்கும்போது, தந்தை துளசி உறங்கிய நிலையில் படுக்கை அறையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு அழுதுள்ளனர்.
உயிரிழந்த தனது தந்தை துளசியின் எதிர்பார்ப்பு, தனது மகள் கிருத்திகா எதிர்காலத்தில் ஒரு வட்டாட்சியராக வர வேண்டும் என்பது தான். இதனைக் கருத்தில்கொண்டு, உயிரிழந்த தந்தையின் சோகத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டு, கனத்த இதயத்தோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற கணிதம் தேர்வு எழுதுவதற்கு கிளம்பிச் சென்றார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், கிருத்திகா பொதுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
தந்தை உயிரிழந்த நிலையிலும் அவரது கனவினை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மகள் கிருத்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வந்த சம்பவம் தந்தை மீது மகள் வைத்திருக்கும் பாசம் என்பது அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:காப்பகத்தில் மரணிக்கும் குழந்தைகள் - காரணம் என்ன?