தாக்குதலுக்கு ஆளான ஊழியரின் வீடு ராணிப்பேட்டை:கடந்த சில வருடங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வட்டி வழங்கப்படும் என்று ஆருத்ரா கோல்டு நிறுவனம் ஆசை வார்த்தைகளைக் கூறி விளம்பரம் செய்தது. மேலும் இந்த ஆருத்ரா கோல்டு நிறுவனமானது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டது.
அதேபோன்று ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் ஆருத்ரா கோல்டு கிளை நிறுவனம் தொடங்கப்பட்டது. புதிதாக துவங்கப்பட்ட நெமிலி ஆருத்ரா கிளை மேலாளராக சதீஷ்குமார் இருந்தார். அதைத் தொடர்ந்து, இவர்களிடத்தில் சயனபுரம் பெரிய தெருவைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான யோகானந்த் , சதீஷ் ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு சயனபுரம், குசேலபுரம், புதுக்கண்டிகை, நெமிலி, அசநெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கோடிக்கணக்கில் பணத்தைச் செலுத்தினர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு இந்நிறுவனமானது வசூல் செய்த அனைத்து பணத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டு மூடப்பட்டது. இது தொடர்பாகச் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆருத்ரா நெமிலி கிளை நிறுவனத்தில் பணியாற்றி வந்த யோகானந்த்தும் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவரது தம்பி சதீஷ் சயனபுரத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். இதற்கிடையே பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில், தங்களது பெயர் உள்ளதா என்று பார்த்ததில் பெயர் இல்லாமல் போனது. ஒருவேளை ஆருத்ரா கோல்டு நிறுவனம் பணத்தை அரசிடம் திருப்பி ஒப்படைத்தாலும் அதிலிருந்து கொஞ்சம் பணம் கூட நமக்குக் கிடைக்காது என்று அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின்னர் ஆத்திரத்தில் சதீஷ்குமார் வீட்டுக்கு திடீரென நள்ளிரவில் திரண்ட மக்கள் பல தடவை கதவைத் தட்டி அவரை வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது சிலர் சதீஷின் வீட்டை கல் வீசி தாக்கியுள்ளனர். அதைத்தொடர்ந்து சயனபுரம் பழைய பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள புங்கன் மரத்தில் கட்டி வைத்தும் சிலர் அவரை தாக்கியுள்ளனர்.
அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்து சதீஷை பாதுகாப்பாக மீட்டு சென்றனர். மேலும் சிலர் சயனபுரத்தில் உள்ள நெமிலி ஆருத்ரா கோல்டு கிளையின் மேலாளர் சதீஷ்குமாரின் வீட்டையும் அடித்து நொறுக்கினர். ஒரே கிராமத்தில் இரு வீடுகளை அடித்து நொறுக்கியது மட்டுமின்றி ஆருத்ரா கோல்டு ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் சயனபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கொஞ்சம் நியூஸ் பேப்பர் படிங்க.. பீகாரை திரும்பி பாருங்க சார்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!