ராணிப்பேட்டை:அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிராமத்தைச் சேர்ந்த முடி வெட்டும் தொழிலாளி முனியப்பனுக்கும் (40), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராதா (34) ஆகிய இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், முனியப்பன் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் மனைவியோடு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ராதா கடந்த 2018ஆம் ஆண்டு கோபத்தில் வீட்டை விட்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்று விட்டார். பின்னர், மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி முனியப்பன் காஞ்சிபுரத்திற்கு சென்று உள்ளார்.
ஆனால் ராதா வீட்டிற்கு வர மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் வீடு திரும்பி விட்டு மது அருந்தி உள்ளார். பின்னர் இரு பிள்ளைகளுக்கும் நீச்சல் பயிற்சி அளிப்பதாகக் கூறி தனியே அழைத்துச் சென்று, கிணற்றில் தன் இரு மகன்களையும் தள்ளி விட்டு தப்பி ஓடி உள்ளார்.
அப்போது மூத்தமகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், இரண்டாவது மகன் படிக்கட்டில் இடித்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கு ராணிப்பேட்டை 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பெற்ற மகனை கிணற்றில் தள்ளி விட்டு கொன்றதற்காக ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க:பேராசிரியர் பணியிடங்களை மூன்று மாதங்களில் நிரப்புக; அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!