ராணிப்பேட்டை: மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் இரண்டு நாள்கள் பெய்த தொடர் மிக கனமழையினால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 4 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிட தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும், 2 நாட்கள் பெய்த கனமழை பாதிப்புகளால் தாழ்வானப் பகுதிகளில் வசித்து வந்த 195 குடும்பங்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நிவாரண முகாமில் தங்கி இருந்த 195 குடும்பங்களுக்கு, தன்னுடைய சொந்த செலவில் பாய், போர்வை குழந்தைகளுக்கு பால் பவுடர், 15 கிலோ அரிசி என நிவாரணப் பொருட்களை வழங்கினார். கனமழை நாட்களில், மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தார்.
கனமழை பாதிப்படைந்த திருவள்ளுவர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து 180 தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் என ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக மீட்பு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.