ராணிப்பேட்டை:தமிழ்நாட்டின் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், முதல் முறையாக வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், விவசாயிகளின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் எல்.சி.மணி பேசினார்.
குரோமியம் கழிவுகளை அகற்ற கோரிக்கை
அப்போது, ராணிப்பேட்டையில் இயங்கிவந்த தமிழ்நாடு குரோமேட்ஸ் அன்ட் கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் மலை போல் தேக்கி வைக்கப்பட்டுள்ள 2.25 லட்சம் டன் குரோமியம் கழிவுகளை அகற்ற நிதி ஒதுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு குரோமேட்ஸ் அன்ட் கெமிக்கல் லிமிடெட் நிறுவனம் அந்தக்கழிவுகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அப்புறப்படுத்தாமல் இருப்பதாக கூறிய அவர், மழை நேரங்களில் இக்கழிவுகள் பாலாற்றில் கலந்துவிடுவதால், விவசாய நிலங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இந்தக் கழிவுகளை அகற்ற கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
"அண்மையில், இப்பகுதிகளை அமைச்சர் ஆர். காந்தி நேரில் ஆய்வு மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இருப்பினும், தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கழிவுகளை அகற்ற கோடிக்கணக்கில் செலவாகும் எனக்கூறப்படுகிறது. எனவே, விரைந்து நிதி ஒதுக்கி குரோமியக் கழிவுகளை அகற்றவேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு" என்றார் எல்.சி. மணி.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை
மேலும், "பாலாறு-பொன்னையாறு இடையே தடுப்பணைகள் கட்டப்படவேண்டும், பொன்னையா ஆற்றின் கால்வாய் தூர்வாரப்படவேண்டும். தூர்வாரப்படாததால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாச ஏறிகளான ஒழுகூர் போன்ற ஏரிகளுக்கு தண்ணீர் வருவதில்லை.
மேலும், நிமிலி, பனப்பாக்கம் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் போல் மாவட்டத்தில் ஏனைய பகுதிகளுக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டித்தரப்படவேண்டும். இதற்காக நிதி ஒதுக்கவேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகரகுப்பம், செங்கல்நத்தம் போன்ற பல இடங்களில், உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
தமிழ்நாடு குரோமேட்ஸ் அன்ட் கெமிக்கல் லிமிடெட் அதற்காக, கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கான உரிய இழப்பீடு இன்றுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதேபோன்று, ஐஓசிஎஸ் நிறுவனத்தில் கேஸ் பைப் லைன் அமைக்கும் பணிகளுக்காக விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடும் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி இப்பிரச்னைகளை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து உடனடித் தீர்வு காணவேண்டும்" என அவர் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:"அரசு அக்கறை செலுத்த மறுத்தால் நானே நேரடியாக களத்திற்கு வருவேன்" - ராமதாஸ்!