ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் 7 நடைமேடையில் நின்று கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் மீது ஏறி நடந்து கொண்டிருப்பதாக அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் கீழே இறங்குமாறு கூறியபோது, அதை மறுத்த அந்த நபர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொள்வதை அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரை பத்திரமாக மீட்கவேண்டுமெனில், முதலில் ரயில் பாதைக்கு மேலே செல்லும் உயர் அழுத்தம் கொண்ட மின்சாரத்தை முதலில் துண்டிக்க எண்ணினர்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மார்க் அவரிடம் பேச்சுக் கொடுத்தவாறே, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, மின்சார ரயில் அலுவலர்கள் உயரே சென்ற உயரழுத்த மின்சாரத்தை நிறுத்தினர்.
இதற்கிடையே அங்கிருந்த யாரும் எதிர்பாராத விதமாக, அந்த நபர் ரயில் பெட்டிகளின் மீது ஓடத் தொடங்கினார். பின்னர் செய்வதறியாமல் நின்றவர்களின் மத்தியில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மகாலிங்கம், ஜித்தேந்திரா மீனா மற்றும் ரயில்வே ஊழியர் பத்மநாபம் ஆகிய மூவரும் அந்த நபருக்கு தெரியாமல் ரயில் பெட்டியின் மேலே ஏறி அவரை, இலகுவாகப் பிடிக்க முயற்சித்தனர். இதை அறிந்த அந்த நபர், திடீரென கீழே குதிக்க முற்பட்டார்.