ராணிப்பேட்டை:வாலாஜாப்பேட்டை பகுதியில் பூர்வீகமாகப் பொதுமக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ படவேட்டம்மன் கோயிலின் உண்டியலுக்குச் சீல் வைத்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற இந்து அறநிலையத்துறை அதிகாரிகளைப் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உண்டியலை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் மிகவும் பழமையான ஸ்ரீ படவேட்டம்மன் என்ற கோயில் உள்ளது. இந்த கோயில் ஆண்டாண்டு காலமாக இப்பகுதி பொது மக்களின் கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது. இந்த நிலையில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் அதிகாரிகள் ஒருசிலர் நேற்று (நவ 09) காலை திடீரென வருகைதந்து இந்த கோயிலைக் கையகப்படுத்தி தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், இந்த நடவடிக்கைகளில் ஒருபகுதியாகக் கோயிலின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியலுக்குச் சீல் வைக்க முயன்றுள்ளனர். இதனை அறிந்த படவேட்டம்மன் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அறநிலையத்துறை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தியதோடு உண்டியலுக்குச் சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.