வரும் தேர்தலில் தேமுதிக தன் பலத்தை வெளிப்படுத்தும் என கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, உள்ளாட்சி மற்றும் ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட தேமுதிகவின் வாக்கு விகிதம் மிகவும் சரிந்து உள்ளது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ''சக்கரத்தாரை தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளேன். சக்கரம் சுழன்று கொண்டு தான் உள்ளது. அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும்'' எனக் கூறினார்.
மேலும், ''தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துள்ளது. பெண்கள் கூட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். தெருவுக்கு நான்கு ஒயின் ஷாப்புகள் என 24 மணி நேரமும் மது கிடைப்பதால் சட்டம் ஒழுங்கு பெரிதளவில் பாதித்து சீர்குலைந்து போயுள்ளது'' என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆகப்போகிறார் என்று மூத்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் பேசுகிறார்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''தனது குடும்பத்திலிருந்து எந்த வாரிசுகளும் அரசியலுக்கு வர மாட்டார்கள் எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தற்போது தனது மகனான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக அமர வைக்க ஆசைப்படுகிறார். இதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பலவேசக்காரர் சுவாமி கோவில் கொடை விழாவில் வாழைத்தார் போட்டி - 4 கிராம் மோதிரம் பரிசளிப்பு!