ராணிப்பேட்டை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கான பரிசுத் தொகுப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவை கொள்முதல் செய்வதற்கான அரசாணை கடந்த ஜன.1 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.
அதில் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 42 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை கொள்முதல் செய்ய, மொத்தமாக 238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ரூபாய் ஒதுக்கப்பட்டு, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனிடையே அரசின் அறிவிப்பில், பொங்கல் பரிசுத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு விடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு பல்வேறு ஆலோசனைக்குப் பிறகு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.