ராணிப்பேட்டை: நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், கடந்த 2021-ஆம் ஆண்டு கட்டிடத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ₹40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், பள்ளி கட்டிடம் சார்ந்த கட்டுமான பணியை இதுவரைக்கும் தொடங்கவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும், அங்கிருந்த பள்ளி மாணவர்களுக்கு அதே பகுதியில் வாடகை வீட்டில் பள்ளி செயல்பட்டு வருவதாகவும் கூறினர். இதனால், பள்ளியை உடனடியாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்துள்ளனர். ஆனால் இதுவரை பள்ளியை கட்டுவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.