அரக்கோணம் அருகே தவறான தடுப்பூசி செலுத்தியதால் பிறந்த 45 நாட்களான குழந்தை உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் ராணிப்பேட்டை:அரக்கோணம் அடுத்த பழனிபேட்டை, விஜயராகவன் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் - சர்மிளா தம்பதி. இவர்களது பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த புதன்கிழமை (டிச.27) காசநோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு, கடந்த 2 நாட்களாக அவதிப்பட்டு வந்த குழந்தை, இன்று காலை மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தவறான தடுப்பூசியால்தான் குழந்தை இறந்ததாக அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரக்கோணம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, அங்கு பணியிலிருந்த மருத்துவர் விக்னேஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், குழந்தை இறந்த ஆத்திரம் தாங்காமல் அங்கிருந்த டேபிள், 2 மின்விசிறி மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பல் மருத்துவ பரிசோதனை இயந்திரம் ஆகியவற்றை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும், அங்கிருந்த மருந்து மாத்திரைகளை தரையில் தூக்கி எறிந்துள்ளனர். இதனிடையே, இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் அங்கு வந்து அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, அரக்கோணம் எம்எல்ஏ ரவி சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ஆறுதல் கூறி உள்ளார். மேலும், இது குறித்து எம்எல்ஏ ரவி கூறுகையில், “குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
அரக்கோணம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மிக கவனக்குறைவாக மருத்துவம் பார்ப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகதான் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறுகின்றார்கள் .எனவே குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு, தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க வேண்டும்” என கூறினார்.
இதையும் படிங்க:திருவாரூர் மாவட்ட குற்றங்களின் ஆண்டறிக்கை! அதிரடி காட்டிய மாவட்ட எஸ்.பி.