வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மடிப்பிச்சை கேட்டு நூதன போராட்டம் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கன்னிகாபுரம் பகுதியில் சர்வே எண் 148இல் 50 ஆண்டுகளாக வசித்து வரும் 105 குடும்பத்தினர், அரசுத் துறைகளிடம் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பல மனுக்கள் வழங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் பட்டா வழங்குவதற்கான இடம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றதாகவும், அத்துடன் பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும், இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிடச் சென்றால், பட்டா வழங்குவதற்கான வழங்கப்பட்ட மனுக்கள் மற்றும் கோப்பு ஆவணங்கள் காணவில்லை என அலட்சியமாக பதில் கூறுவதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வருகிற கலைஞர் நூற்றாண்டு விழாவின்போது சிறப்பு முகாம் நடத்தி, வீட்டுமனை பட்டா என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த 105 குடும்பத்தினர் ஒன்றிணைந்து, கைகளில் தட்டை ஏந்தி மடிப்பிச்சை கேட்டு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை மனுவினை வழங்கி உள்ளனர்.
இதையும் படிங்க:அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை.. அச்சத்தில் ராணிப்பேட்டை மக்கள்!