எதிர்வரும் 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் திமுக தேர்தல் பரப்புரையை கடந்த 20ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்த பரப்புரையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 16 ஆயிரத்து 500 கிராம சபைகள் - வார்டுகளில் திமுக மாவட்ட, மாநகர செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் என 1704 திமுக நிர்வாகிகள் இணைந்துள்ளனர். அந்த கூட்டங்களில் அதிமுகவுக்கு எதிராக 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் கிராமசபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு கடந்த 24ஆம் தேதியன்று தடை விதித்தது. இதனையடுத்து, கிராம சபை கூட்டம் இனி 'மக்கள் கிராமசபை கூட்டம்' என்ற பெயரில் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த வகையில், 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' பரப்புரையின் ஏழாம் நாளான இன்று (டிச.29) அனந்தலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது ஊர் பொதுமக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், " கிராம சபை என்றாலே தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. அதனால்தான் தடைபோட்டுள்ளார்கள். என்ன தடை போட்டாலும் அதை உடைப்பவர்கள் நாங்கள். அதனால்தான் மக்கள் கிராம சபை என அதனை மாற்றி தடைகளை மீறி மக்களை சந்தித்துவருகிறோம். கிராம சபையை அரசுதான் நடத்த வேண்டும். ஆனால் இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் நடத்த முன்வரவில்லை. இதனால்தான் எதிர்க்கட்சியான நாங்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினோம். இங்கு கூடியிருக்கும் பெண்களை பார்க்கும்போது வரும் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம் என்பதை காட்டுகிறது.
அதிமுகவினர் ஆடிப்போயுள்ளனர்
திமுகவின் கிராம சபைக் கூட்டத்தைப் பார்த்து, அவர்கள் ஆடிப்போயுள்ளனர். மக்களிடையே பொய் பரப்புரை மேற்கொள்ளும் விதமாக இன்றைக்கு அனைத்து பத்திரிகையிலும் 2 பக்க அளவிற்கு தங்களது சாதனை என விளம்பரம் கொடுத்துள்ளார்கள். ஆனால் அது அனைத்தும் பொய்யானது என தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர்.
இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பொய் சொல்கிறார்கள். உண்மையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் கொலை, கொள்ளைகள் அதிகம் நடந்து முதலிடத்தில் உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக உண்மைகள் வெளிவர வேண்டுமென நீதி விசாரணை கேட்டவர் ஓ.பன்னீர் செல்வம். அதே ஓ.பன்னீர் செல்வம் தான் இப்போது துணை முதலமைச்சராக உள்ளார். விசாரணை ஆணையம் 8 முறை சம்மன் அவருக்கு அனுப்பியும், இதுவரை ஒரு முறைகூட அவர் ஆஜராகவில்லை.
கரோனா காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு 5000 ரூபாய் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதை இதுவரை கொடுக்கவில்லை. தற்போது தேர்தல் வருவதால் 2500 ரூபாய் பொங்கல் பரிசாக தருகிறார்கள். இதற்கு முன்பு கரோனா காலத்தில் 1000 ரூபாய் என மொத்தம் 3500 ரூபாய் கொடுத்தாகிவிட்டது. நான் கோரியதுபோல 5000 ஆயிரம் ரூபாயில் மீதமுள்ள 1,500 ரூபாயை மக்களுக்கு எப்போது தரப்போகிறீர்கள்.
இந்த பொங்கல் தொகை 2 ஆயிரத்து 500 ரூபாயை வழங்குவது தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளன. அதில், அதிமுக பிரமுகர்கள் புகைப்படத்தை போட்டு விநியோகித்திருக்கிறார்கள். அரசின் பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கடைகள் மூலமாக வழங்காமல், அதிமுக மாவட்ட செயலாளர்கள் மூலம் கொடுத்து வருகிறார்கள்.
அரசின் கஜானாவிலிருந்து வழங்கப்படும் பணத்தை கட்சி பணமாக காட்டுகிறார்கள். உதாரணமாக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் போன்றவர்களின் படங்களை போட்டு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்கின்றனர். பணம் விநியோகிப்பதை திமுக தடுக்க நினைப்பதாக சொல்கிறார்கள். சத்தியமாக அதை நாங்கள் தடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதை உயர்த்திக்கொடுங்கள் என்றுதான் வலியுறுத்திவருகிறோம்.
அனந்தலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது நாடாளுமன்றத்தில் வென்றதைப்போல், 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுகதான் வெற்றிபெற போகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ராணிப்பேட்டை நவ்ளாக் பண்ணையில் அரசு வேளாண் கல்லூரி நிச்சயம் அமைக்கப்படும். ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அனந்தலை உள்ளிட்ட பகுதிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பின்மையை கட்டுப்படுத்த மக்கள் நல பணியாளர்கள் திட்டத்தை திமுக ஆட்சியில் கொண்டு வந்தோம். ஆனால், அதை இந்த அரசு ரத்து செய்துள்ளது.
உயர் நீதிமன்றம் சென்றோம், சட்டப்போராட்டம் நடத்தினோம். அதனை தொடர உத்தரவு பெற்றோம். அந்த உத்தரவை எதிர்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் தல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்.
இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழ்நாட்டின் மகளிர் சுய உதவி குழுக்கள், இன்று அநாதைக் குழுவாக மாறியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை குழு அமைத்து ஒழுங்குப்படுத்தப்படும். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவருக்கும் இடையில் அரசியல் போட்டி நடந்துக்கொண்டிருக்கிறது. அங்கு யார் முதலமைச்சர் வேட்பாளர் என்றே தெரியவில்லை.
அதிமுகவில் உள்ள சில அமைச்சர்களே தங்கள் முதலமைச்சர் வேட்பாளரை பா.ஜ.க அறிவிக்கும், மோடி அறிவிப்பார் என கூறுகின்றனர். ஓ.பி.எஸ் நிச்சயம் அதிமுகவை விட்டு தனியே செல்வார். அதிமுக நிச்சயம் உடையும். திமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் என யாரும் கிடையாது. இருப்பினும், மக்கள்தான் என்னை முதலமைச்சராக வரவேண்டும் என சொல்கிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க :பட்டியலின மகளிருக்கான விடுதி கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர்