ராணிப்பேட்டை:ஆற்காட்டில் நிலப் பிரச்னை தொடர்பாக உறவினர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கட்டிட மேஸ்திரியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டுச் சென்ற உறவினரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர், கிருஷ்ணன் (48).
இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவரது அக்கா மகன் முரளிக்கும், தங்கையின் கணவர் முனுசாமிக்கும் இடையே இவர்களுக்குச் சொந்தமாக ஆந்திராவில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சினையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (அக்.2) ஆற்காடு பெரியாண்டவர் கோயில் அருகில் நிலப் பிரச்சினை தொடர்பாக பஞ்சாயத்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணனின் வீட்டுக்கு வந்த அவரது அக்கா மற்றும் தங்கை குடும்பத்தினர், கிருஷ்ணனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கிருஷ்ணனின் மகன் சேதுராமன், முரளியை தாக்கி உள்ளார். இதனால் அங்கு மீண்டும் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அனைவரும் அவர்களாகவே கலைந்து சென்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று (அக் 02) இரவு கிருஷ்ணன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக சிறிய அளவில் தீப்பற்றியுள்ளது. உடனடியாக அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக கிருஷ்ணன் அந்த தீயை அணைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் பெட்ரோல் குண்டு வீசியதாக கிருஷ்ணனின் அக்கா மகன் முரளியை போலீசார் கைது செய்தனர்.
மேலும், முரளியை தாக்கியதாக கிருஷ்ணனின் மகன் சேதுராமன் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலப்பிரச்சினை தொடர்பாக உறவினர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கட்டிட மேஸ்திரியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் ஆற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:'சதுரங்க வேட்டை' பட பாணியை மிஞ்சிய பண மோசடி.. நூதன திருட்டில் ஈடுபட்டவர் சிக்கியது எப்படி?