கரையை கடந்த நிவர் புயல் ராணிப்பேட்டை, வேலூர் வழியாக ஆந்திராவிற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், காலை முதல் லேசான காற்றுடன் ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு, தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் நிரம்பி வரும் ஏரிகளை கண்காணிப்பதற்கு தனி குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, ஆங்காங்கே சேதம் குறித்த தகவல்களை தெரிவிக்க வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேரிடர் ஏற்படும் பட்சத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக 5 தீயணைப்பு நிலைய வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
ராணிப்பேட்டையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை கே.கே.நகர் குடியிருப்பு பகுதியிலுள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:Nivar Cyclone Live Updates: நிவர் புயலின் தாக்கம் குறித்த உடனடி தகவல்கள்