வாக்குகளுக்காக பணம் மற்றும் பரிசுப்பொருள்களை வாக்காளர்களுக்கு வழங்குவதைத் தடுக்க, தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படையினர், நிலைக் கண்காணிப்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி வசந்தம் அவன்யூ பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு சொந்தமான பங்களா உள்ளது. அதன் அருகே பணபட்டுவாடா செய்யப்படுவதாக ராணிப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான இளம்பகவத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சார் ஆட்சியர் இளம்பகவத், தேர்தல் பறக்கும் படையினர், ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, அதிமுக வேட்பாளர் பங்களாவின் சுற்றுச் சுவரில் இருந்து இளைஞர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். எம் சுகுமாருக்கு தேர்தலுக்கு பணி செய்ய ஆந்திர மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 27 நபர்களில் அவரும் ஒருவர் என்பதும், இந்த வேலையில் ஈடுபட மறுத்தால் அறைக்குள் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்துவதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.