ராணிப்பேட்டை:வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் கடந்த இரண்டு நாளாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. இதில் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள சுற்றுவட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த கனமழையால், நெற்பயிர் கடும் சேதமடைந்தன.
இந்நிலையில், சேதங்களை விரைந்து கணக்கீடு செய்து உரிய நிவாரண வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று வேளாண் அதிகாரிகளுக்கு மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் பெய்த கன மழையின் காரணமாகவும், மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த அதி கனமழையால் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், கலவை, திமிரி, ஆற்காடு, நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பொன்னி, மகேந்திரா, சீரக சம்பா, கோ 51, ஸ்ரீ கிருஷ்னா பொன்னி, ஆர்.என்.ஆர் உள்ளிட்ட நெல்ரக பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேதமடைந்த நெற்பயிர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கும் வகையில், மாவட்ட வேளாண் துறை அலுவலகம் மூலம் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம் பகுதியில் சேதமான பயிர்களை மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று (டிச. 5) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.