ராணிப்பேட்டை:திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துத் துறை திட்டக்குழு சார்பில் வாழ்வின் முதல் 1000 நாட்கள் என்ற புதிய திட்டத்தின் அறிமுக விழா மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், மாவட்ட ஆட்சியர் வளர்மதி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 118 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 478 துணை சுகாதார நிலையங்கள் மூலம் கடந்த இரு ஆண்டுகளில் 74 ஆயிரத்து 400 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த 74 ஆயிரத்து 400 குழந்தைகளுக்கும் மாநில திட்டக் குழுவின் சார்பில் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கான சிறப்பு நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த முதல் ஆயிரம் நாட்கள் என்பது கர்ப்ப காலத்தில் ஒரு 280 நாட்கள், சிசு பருவம் என்கின்ற வகையில் முதல் ஆண்டு, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற குழந்தைகளுக்கு குழந்தைப் பருவம் என்கின்ற வகையில் ஒரு 365 நாட்கள் என கர்ப்பம் தரித்த நாள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை என ஆயிரம் நாட்கள் கணக்கிடப்படுகிறது.