ராணிப்பேட்டை: மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் மாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல் கட்டமாக ரூ.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, ராணிப்பேட்டையிலிருந்து கொண்டு செல்லும் லாரியை, அமைச்சர் காந்தி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 4ஆம் தேதி கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த தொடர் கனமழையினால் சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்து, பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
புயல் தாக்கத்தால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டும் வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும், நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தது.