தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கட்டட சுற்றுச்சுவரில் அதிமுக விளம்பரம் - இருவர் மீது வழக்குப்பதிவு - அமைச்சர் காந்தி

சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் இல்லத்தின் சுற்றுச்சுவரில் அதிமுக சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததை அமைச்சர் காந்தி கண்டித்ததை அடுத்து காவல் துறையினர் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரசு கட்டிட சுற்றுச்சுவரில் அதிமுக விளம்பரம்
அரசு கட்டிட சுற்றுச்சுவரில் அதிமுக விளம்பரம்

By

Published : Jul 20, 2023, 7:41 AM IST

ராணிப்பேட்டை: சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா கடந்த 1967ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று பெயர் சூட்டினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட தினத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய முன்தினம் (ஜூலை 17) அறிவித்து இருந்தார்.

அந்த வகையில், ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் தமிழ்நாடு தினத்தை கொண்டாடும் விதமாக மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரும் வழியில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த இல்லத்தின் சுற்றுச்சுவரில் அதிமுக சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருந்துள்ளது. இதனைக் கண்ட அமைச்சர் காந்தி நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியரிடம், அரசினர் குழந்தைகள் இல்லம் சுற்றுச் சுவரில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்தது குறித்து விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடுமையாக எச்சரித்துள்ளார். இதனை அடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அந்த சுவர் விளம்பரம் உடனடியாக அழிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி இன்றி சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் இல்ல சுற்றுச்சுவரில் விளம்பரம் செய்தவர்கள் மீது அரசினர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அரசினர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை காவல் துறையினர் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ராணிப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதியில் திமுக - அதிமுக கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜூலை 22-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்; ஆலோசனை செய்யப்படும் விவகாரங்கள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details