அரசு ஐடிஐ-யில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.வி.கணேசன் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தில் அரசு ஐடிஐ அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன், இன்று (ஜன.4) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஐடிஐ முதல்வர் சித்ராவிடம் ஐடிஐ எப்போது தொடங்கப்பட்டது, எவ்வளவு மாணவர்கள் படிக்கின்றார்கள், அதன் செயல்பாட்டின் நிலை போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து, ஆய்வுக்காக ஒவ்வொரு வளாகத்தினுள் ஒவ்வொரு பணிமனையாகச் செல்ல முயன்றபோது, ஐடிஐயின் தொடக்கப் பகுதியிலேயே குப்பைக்கூளங்கள் நிறைந்து காணப்பட்டது. இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த அமைச்சர் சி.வி.கணேசன் "இப்படித்தான் ஐடிஐ வைத்திருப்பீர்களா? அமைச்சர் வரும் நாளில்கூட சுத்தம் செய்ய மாட்டீர்களா?" என்று முதல்வரை கடிந்துகொண்டார்.
அதற்கு பதிலளித்த வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி, ஆட்கள் பற்றாக்குறையால் இது போன்று இருப்பதாக தெரிவித்தார். அதற்கு அமைச்சர் சி.வி.கணேசன், இதற்கெல்லாம் ஐடிஐ முதல்வர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். தினமும் ஐடிஐ வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வளாகத்தில் கழிவறைக்குள் சோதனை மேற்கொண்ட நிலையில், இப்படி சுத்தமில்லாமல் இருக்கிறதே என்று மீண்டும் அதிகாரிகளை கடிந்துகொள்ள, பின்னர் ஒவ்வொரு பணிமனையாகச் சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து பயிற்றுநர்கள் பாடம் எடுப்பதை மாணவர்களுடன் அமர்ந்து கவனித்த அமைச்சர், தரமான பயிற்சியைக் கொடுத்து இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார்.
மேலும், மாணவர்கள் சிலரிடம் கலந்துரையாடும்போது, ஐடிஐ படிப்பிற்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது என்று மாணவர்களிடம் கேள்வி எழுப்ப, மாணவர்கள் அமைச்சரின் கேள்விக்கு பதிலளித்தனர். தொடர்ந்து, ஒவ்வொரு பணிமனையாகச் சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார். ஆய்வைத் தொடர்ந்து, ஐடிஐ முதல்வர் மற்றும் அலுவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி துறை அதிகாரிகள், திமுக பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:14வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!