வேலூர்: வேலூரை தலைமையிடமாகக் கொண்டு, பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு ரூ.6000 கோடி அளவிற்கு மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜுலை 6) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள உறவினர், முகவர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதிநிறுவனம் முதலீடு செய்யும் தொகைக்கு மாதம் 5 சதவீதம் வரை, கவர்ச்சிகர வட்டி அளிப்பதாக விளம்பரம் செய்திருந்தது. தவிர, முதலீடுகளை ஈர்க்க வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் முகவர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து முதலீடுகள் பெறப்பட்டன.
அதன்படி, இந்த நிறுவனத்தில் சுமார் லட்சம் பேர் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வட்டி, அசல் தொகைகளைத் திருப்பித் தராமல் மோசடி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் புகாரின்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில், ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மூலம் வடமாவட்டங்களில் சுமார் ரூ.6000 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லட்சுமிநாராயணன், இயக்குநர்கள் ஜனார்த்தனன், ஜெகன்நாதன், குப்புராஜ், சரவணக்குமார் உள்ளிட்டோர் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில், வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள லட்சுமிநாராயணன், ஜனார்த்தனன் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த நிதிநிறுவனத்தின் முகவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணம், கார்கள், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர் விசாரணையில் ஐ.எஃப்.எஸ் நிர்வாகிகள் 13 பேர் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஐஎஃப்எஸ் நிதிநிறுவன இயக்குநர்களின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, வேலூர் சத்துவாச்சாரி பகுதி 1இல் உள்ள ஐஎஃப்எஸ் நிதிநிறுவன இயக்குநர் ஜனார்த்தனின் தாத்தா பக்தவச்சலத்தின் வீடு, காட்பாடி செங்குட்டையிலுள்ள ஜனார்த்தனின் மாமியார் வசந்தகுமாரி ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல், நெமிலியைச் சேர்ந்த முகவர் ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இதனிடையே, வங்கி பரிவர்த்தனை தொடர்பாக வேலப்பாடியிலுள்ள எம்.என்.ஜூவல்லரி உரிமையாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையால் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை:அரக்கோணம் மற்றும் நெமிலியில் உள்ள ஐஎஃப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட்டுகளின் வீடுகளில், மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் வேலூர் காட்பாடியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தில் 4 பேர் இயக்குநராக இருந்தனர். இதில் இயக்குநர்களில் ஒருவரான மோகன்பாபு ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.
இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் ஏஜென்ட் ஆக பணியாற்றி வந்தார். கமலக் கண்ணனிடம் அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பலர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மூடப்பட்டது. இது குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்கள் 4 பேரும் தலை மறைவாகினர்.
ஏஜென்ட்கள் சிலர் மட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸிடம் சிக்கினர். இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பணம் கொடுத்து ஏமாந்த மக்கள் தினமும் தங்களின் பணம் எப்போது திரும்ப கிடைக்கும் என்று கேட்டு வருகின்றனர். ஆனால், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மந்தகதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென அரக்கோணம் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த ஏஜென்ட் கமலக்கண்ணன் வீட்டுக்கு 2 கார்களில் 4 அதிகாரிகள் திடீரென சோதனை நடத்த வந்தனர். பாதுகாப்பிற்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் உள்ளூர் போலீசாரை அழைத்தால் தகவல் தெரிந்துவிடும் என்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரை அழைத்து வந்தனர். போலீசார் ஏஜென்ட் கமலக்கண்ணன் வீட்டில் சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஏதேனும் உள்ளதா என்று தீவிர சோதனை நடத்தினர். இந்த விசாரணை பல மணி நேரம் நீடித்தது.
நெமிலி: அதேபோன்று நெமிலி அடுத்த அசநெல்லிக்குப்பம் குறுக்கு மேட்டுத் தெருவைச் சார்ந்த குமாரராஜா என்ற ஐஎஃப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் வீட்டில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர். குமாரராஜா காஞ்சிபுரத்தில் குடியிருந்து வந்தார் . சில மாதங்களுக்கு முன்பாகவே அசநெல்லிக்குப்பத்தில் உள்ள பூர்வீக வீட்டுக்கு வந்தார். இவரது வீட்டிலும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் உள்ளதா என்று சோதனை நடத்தினர். ஒரே நாளில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐ எஃப் எஸ் நிதி நிறுவன இயக்குநர் மற்றும் ஏஜென்ட்களின் வீடுகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை மற்றும் நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்