ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 80 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல்செய்யப்பட்டு, உழவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் தச்சம்பட்டறை கிராமத்தில், கடந்தாண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உழவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிலையத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த உழவர் வெங்கடாசலம் என்பவர் முறையான அனுமதி பெற்று நடத்திவரும் நிலையில், அறுவடையான நெல்லை கொள்முதல் செய்யக் கோரி வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் நாகராஜன், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மோகன் ஆகியோரை வெங்காடாசலம் அணுகியுள்ளார்.
அப்போது அறுவடையான நெல்லுக்கு கொள்முதல் உரிமம் வழங்க ரூபாய் இரண்டு லட்சம் வழங்க வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பணம் தராததால் நெல்லை கொள்முதல் செய்ய அவருக்கு காலதாமதமாக அனுமதி வழங்கியுள்ளனர்.