ராணிப்பேட்டை: பனப்பாக்கம் அருகே, ஓய்வு பெற்ற தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 41 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம்போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம்புதூர், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (60). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், நேற்று (டிச.15) வழக்கம் போல் இவரும், அவரது மனைவி சரளாவும் அவர்களது விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளனர்.
பின்னர், விவசாயப் பணிகளை முடித்துவிட்டு, இருவரும் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், வீட்டு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்த நிலையில், பூட்டிய கதவுகள் திறக்கப்பட்டு, வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிய நிலையில் இருந்துள்ளது.