ராணிப்பேட்டை: பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தோல் தொழிற்சாலை தொழிலதிபர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பங்கேற்றார். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் தொழில்துறை முதலீடுகள் குறித்து பாஜக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் தமிழகத்தில் ஹோன்-ஹாய் (Foxconn Hon Hai) நிறுவனத்தின் சார்பில் 1600 கோடி ரூபாய் முதலீட்டில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை ஏற்படுத்தி, அதன் மூலம் 6,000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.
அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் தமிழகத்தில் அதிக அளவில், தொழில்துறை முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு நிச்சயம் சாதனைப் படைக்கும் என்றும் கூறினார். தமிழகத்திற்கு தொழிற்சாலை வருவதினால் பாஜகவுக்கு வயித்தெரிச்சல் என நினைக்கத் தோன்றுகிறது என்றும் கூறினார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகள் பெருகி வருவதைக் கண்டு பாஜகவினர் வயிற்றெரிச்சல் அடைந்துள்ளதாகவும், தமிழகத்திற்கு வளர்ச்சித் திட்டங்கள் வருவதில் அவர்களுக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை என்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க:அப்துல்லாபுரம் பகுதியில் விரைவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்-அமைச்சர் T.R.B.ராஜா
தொடர்ந்து பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, "தமிழகத்தில் உள்ள சிப்காட் பகுதிகளில் மூடி இருக்கும் தொழிற்சாலைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கி, மீண்டும் தொழில் துவங்க தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சிப்காட் பகுதிகளில் உபயோகப்படுத்தாத நிலங்களை மீண்டும் உபயோகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் செய்யப்படும். தமிழக அரசின் நோக்கமே முழு முதலீடுகளைக் கொண்டு வந்து அந்தந்த பகுதிகளில் வேலை வாய்ப்பினை உருவாக்குவதே" என்று கூறினார்.
மேலும் ஹோன்-ஹாய் (Hon Hai) நிறுவனத்தின் தலைவர் யெங்க் லியு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசியதை குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறினார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக தொழிற்சாலை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் அமைச்சர் T.R.B ராஜா கூறினார். மேலும் இந்தக் கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி, ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மற்றும் தோல் தொழிற்சாலை தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கோவையில் புஷ்பா பட பாணியில் சுமார் 1 டன் சந்தனக்கட்டைகள் கடத்தல் - அதிரடியாக விரட்டிப்பிடித்த போலீஸ்!