வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், இளவரசன்(28). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதல் இளவரசன் காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவேரிப்பாக்கம் காவல் துறையினர், ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி உத்தரவின் பேரில், மூன்று தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சந்தேகத்தின் அடிப்படையில் அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்கிற லாலு (27), பூவரசன்(24), வாசுதேவன் (27) மற்றும் அருண்குமார் (33) ஆகியோரைப் பிடித்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், காணாமல் போன இளவரசன் மற்றும் பிடிபட்டவர்களுக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அடுத்து வரும் மைலர் திருவிழாவில் தகராறு ஏற்பட்டதும், அது தொடர்பாக காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த நவம்பர் 6 அன்று மாலை அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள அரிச்சந்திரன் சிலை அருகே லோகேஷ், பூவரசன், வாசுதேவன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இளவரசனை வம்பிழுத்து, கையில் வைத்திருந்த கத்தி, பீர் பாட்டிலால் சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.