ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அடுத்த பிஞ்சு ஜெயராம் பேட்டை பகுதியை சேர்ந்த வேணு என்பவருக்கு சொத்தாக 26 சென்ட் இடம் அப்பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேணுவிற்கு சொந்தமான 26 சென்ட் இடத்தில் இருந்து 15 1/2 சென்ட் இடத்தினை தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தி அதற்கான இழப்பீடு தொகையினையும் வழங்கி உள்ளனர்.
இதனை தொடர்ந்து மீதமுள்ள 10 1/2 சென்ட் இடத்தினை வேணு கடந்த 2005-ஆம் ஆண்டு வாலாஜா பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கு விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் வேணு உயிரிழந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், தற்போது வேணுவின் மகன்கள் மற்றும் மகள்கள் இணைந்து விற்பனை செய்யப்பட்டுள்ள 10 1/2 சென்ட் இடத்தை மறு விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.
இதற்காக அவர்கள் அந்த 10 1/2 சென்ட் இடத்தின் சர்வே எண்ணைக் கொண்டு புதிதாக கூட்டு பட்டாவாக போலி பத்திரம் தயார் செய்துளனர். பின்னர், வேணுவின் மகன் ரமேஷ் (53) மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து சென்னையைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கு அந்த 10 1/2 சென்ட் இடத்தை விற்பனை செய்வதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ.22 லட்சம் பணத்தை பெற்று கொண்டு பவர் ஆப் பட்டா செய்து கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அபிராமி மற்றும் அவரது கணவர் ஜனார்த்தனன் ஆகியோர் பவர் ஆப் பட்டா செய்யப்பட்ட இடத்தின் சர்வே எண்ணைக் கொண்டு, சர்வேயர் மூலம் விசாரணை செய்த போது அந்த இடம் 2005-ஆம் ஆண்டு வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கு ரமேஷின் தந்தை வேணு விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.