ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் குறிஞ்சிநகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் நரேஷ், அனிஷ் மேத்யூ. இருவரும் இந்திய காங்கிரஸ் மாணவர் படை சார்பில் ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர். இதில் அனிஷ் மேத்யூ பெங்களூருவில் வானியல் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கரோனாவால் தனியார், அரசு மருத்துவமனைகளில் புதிதாக நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கான படுக்கைகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் வசதி ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது.
இதனை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனைகள் தோறும் கூடுதல் படுக்கைகளை தயார் செய்து வருகின்றன. ஆக்ஸிஜன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்ட இளைஞர்கள் வெளிநாட்டிலிருந்து அதிக செலவில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்வதைக் குறைக்க எண்ணினர்.
மாற்றாக குறைந்த செலவில் உள்நாட்டு பொருட்களை கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதன்படி காற்றில் உள்ள 21 விழுக்காடு ஆக்ஸிஜனை, ஜியோ லைட் என்ற வேதிப் பொருளை பயன்படுத்தி, கம்ப்ரசர் மூலம் தனியாக பிரித்து எடுத்து குடுவையில் சேமிக்கும் தத்துவத்தைப் பயன்படுத்தி ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.