ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ளது யோக நரசிம்மப் பெருமாள் கோயில். 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்த பெற்ற லட்சுமி நரசிம்ம கோயிலாக இது உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இங்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்துடன் ஆயிரத்து 305 படிக்கட்டுகள் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் முதியவர்கள், குழந்தைகளின் சிரமத்தை போக்கும் வகையில், டோலி தூக்கும் தொழிலாளர்கள் ஆயிரத்து 305 படிகளில் சுமந்து கொண்டு செல்கின்றன்ர.
இந்த தொழிலை நம்பி சுமார் நாற்பது குடும்பம் இருக்கிறது. வாழையடி வாழையாக டோலி தூக்கும் தொழிலையே அவர்கள் செய்து வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி என்று எதுவும் கிடையாது. மாதம் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கடந்த 2016ஆம் ஆண்டு ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரோப் கார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், டோலி தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.