500 ரூபாய் கட்டினால் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்குவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது ராணிப்பேட்டை:முத்துக்கடை அடுத்த சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மீரா. இவர் இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் 500 ரூபாய் கட்டினால் சுமார் 2000 ரூபாய் மதிப்புடைய மளிகை பொருட்கள் வழங்கப்படுவதாக ஆசை வார்த்தை கூறி அதன் மூலம் 8 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, மீரா தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 500 ரூபாய் பெற்றுக் கொண்டு வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தொகுப்பு, 200 ரூபாய் அளவிற்கு கூட தகுதியில்லாதது என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து பொதுமக்கள் வழங்கப்பட்ட மளிகை தொகுப்பு பொருட்களை கிழித்தெறிந்து அதனை தரையில் வீசி விட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல 2000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி தங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, தகுதி இல்லாத பொருட்களை வழங்கி அதன் மூலம் தங்களை ஏமாற்றியதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறுகையில், "ராணிப்பேட்டை சீனிவாசன்பேட்டையைச் சேர்ந்தவர்கள் மீரா - தயாளன் தம்பதி. இதில், மீரா இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் தொழிலாளர்கள் சேவை சங்கத்தில் மாவட்டத்தலைவராக உள்ளதாக கூறப்படுகிறது. சங்கத்தில் உறுப்பினராக இணைப்பவர்களுக்கு விபத்து காப்பீடு, இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உட்பட பல்வேறு உதவித்தொகை வழங்கப்படும். அதற்காக ரூ.1000 முதல் 5000 செலுத்த வேண்டும் என்றும், பல்வேறு நபர்களிடம் கூறி பணம் பெற்று அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கி உள்ளார். மேலும், அரசு பொங்கல் பரிசு பொருட்கள் போல, சங்கம் மூலமாக உறுப்பினராக உள்ளவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அதற்காகவும் இதர காரணங்களுக்காக பலரிடம் ரூ.500 பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில் பொதுமக்களிடம் பல்வேறு காரணங்களை கூறி 1500 பேரிடம் மீரா சுமார் 8 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்தது உறுதியான நிலையில், மீரா(36) மற்றும் அவரது கணவர் தயாளன்(40) ஆகிய இருவரை கைது செய்த ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் 294, 420, 506(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இது போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் இருந்து உறுப்பினர் அட்டை மற்றும் அரசின் சலுகைகளை பெற்று தருவதாக ஏஜென்ட்கள் பலர் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அரசும், மாவட்ட நிர்வாகம் இதுபோல் முறைகேடுகளில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நெருக்கும் நிதி நெருக்கடி - உணவு பொருட்களை வாங்க போராட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி!