ராணிப்பேட்டை:அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (32). அதே பகுதியில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வரும் இவருக்கு, கோமதி (28) என்ற பெண்ணுடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
கருவுற்ற கோமதிக்கு கடந்த 13ஆம் தேதி பிரசவம் பார்க்க மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18ஆம் தேதி மாலை கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் யூ-டியூபை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில், இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மனைவிக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு மயங்கிய நிலையில், லோகநாதன் தனது அக்கா உதவியுடன் மனைவி, இறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.