ராணிப்பேட்டை:நெமிலி அடுத்த அசநெல்லிக்குப்பம் கிராமம் காட்டுக் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், கூலி தொழிலாளி செய்து வருகிறார். இவரது மகள் சபீனா (20). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சபீனாவுக்கு அவரது தாய் மாமனுடன் கடந்த நவ.29ம் தேதி திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய நாளில் திடீரென சபீனா வீட்டிலிருந்து காணாமல் போனார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் இதுகுறித்து நெமிலி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், சபீனாவை தேடி கண்டுபிடித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனர்.
அப்போது ” என்னுடன் பணியாற்றும் தோழி ஒருவர் உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பார்க்கவே பிடிக்கவில்லை. அவரை போய் திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா என்று கேட்டார். அதனால் எனக்கு தாய்மாமனை திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை. அதன் காரணமாகவே நான் வீட்டை விட்டு வெளியில் சென்றேன்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அரக்கோணம் மகளிர் போலீசார் வாலாஜாவில் உள்ள காப்பகத்தில் சபீனாவை சேர்த்தனர். பின்னர் சபீனா கேட்டுக்கொண்டதன்பேரில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி சபீனாவை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் தந்தை சீனிவாசன் நேற்று (டிச.01) கூலி வேலைக்கு சென்று விட, உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் சபீனாவின் தாயார் மட்டும் வீட்டிலிருந்தார்.
அவருக்கு மாத்திரைகளை கொடுத்த சபீனா அங்கிருந்து வெளியே சென்று, பின்னர் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள கூரை வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பல மணி நேரமாகியும் சபீனா ஆள் இல்லையே என்று அவரது தாயார் எழுந்து வந்து பார்த்தபோது கூரை வீட்டில் சபீனா உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் அங்கு விரைந்து வந்து சபீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல தோழி ஒருவரின் பேச்சைக் கேட்டு தாய் மாமனுடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய மணப்பெண் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெமிலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா" பாட்காஸ்டில் இணையும் 3 மாநில முதலமைச்சர்கள் யார்?