மக்கன் பேடா குறித்து விளக்குகிறார் கடையின் உரிமையாளர் குமார் ராணிப்பேட்டை: தீபாவளி பண்டிகை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பட்டாசு, புத்தாடை, வீடுகளில் தயாரிக்கும் முறுக்கு, அதிரசம் எனும் பலகாரம் வகைகள் தான். தீபாவளி நாளில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும் போது நம் வீட்டில் செய்த பலகாரங்கள் அல்லது கடைகளிலிருந்து ஸ்பெஷலான ஸ்வீட்ஸ்களை வாங்கி செல்வது வழக்கம்.
அந்த வகையில் கடையில் வாங்கும் இனிப்பு என்றதும் நம் மனதிற்குத் தோன்றுவது திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா தான். அந்த வரிசையில் ஆற்காடு மற்றும் அருகில் உள்ள பிற மாவட்ட மக்களின் மனதில் தனியிடம் பிடித்திருக்கும் இனிப்பு ரகம் தான் இந்த மக்கன் பேடா.
விஷேசங்களில் பலகாரங்களில் முக்கிய இடம்பிடிக்கும் ஆற்காடு மக்கன் பேட்டாவிற்கு உலகளவிலும் ரசிகர்கள் உள்ளனர். பண்டிகைக்குப் பலரும் வீட்டிலேயே விதவிதமான இனிப்புகளைத் தயார் செய்தாலும், தீபாவளி விசேஷ நாட்களில் மக்கன் பேடா முக்கியமாக இடம் பெற்றிருக்கும். இதனால் தீபாவளி பண்டிகை நாட்களில் மக்கன் பேடா விற்பனையும் உச்சத்தைத் தொடுகிறது.
விருந்தில் தோன்றிய விஷேசம்:ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக ஆற்காடு உள்ளது. பண்டைய வரலாற்றில் ஆற்காடு நகரத்திற்கு எனத் தனிச் சிறப்பு உண்டு. நவாப்கள் ஆட்சிக்காலத்தில் ஆற்காட்டைத் தலைமையிடமாகக் கொண்டு தான் தமிழக, கர்நாடக பகுதிகளை ஆட்சி செய்தனர்.
நவாப்கள் ஆட்சிக் காலத்தின் போது விருந்து ஒன்றில் முதன்முதலாகத் தயாரித்துப் பரிமாறப்பட்ட ஒரு இனிப்பு வகை தான் இந்த மக்கன் பேடா. என்காலத்தில் இந்த மக்கன் பேடா தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் பிரபலமடைந்துள்ளது என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
செய்முறை:மக்கன் பேடா பலரின் விருப்ப இனிப்பு வகையாக இருக்க முக்கிய காரணம், அலாதியான சுவையோடு தயாரிக்கப்படும் முறை தான் என்கின்றனர் மக்கன் பேடா தயாரிப்பாளர்கள். பாதாம், அத்திப்பழம், ஜாதிக்காய், ஏலக்காய் வெள்ளரி விதை, முந்திரி, அக்ரூட், முள் முந்திரி, திராட்சை, சார பருப்பு போன்ற உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டை வகைகளை (dry fruits and nuts) ஒன்றாகக் கலந்து மக்கன் பேடாவுக்குள் வைத்துத் தயாரிப்பது இதன் சுவையை மேலும் மெருகேற்றுவதாகக் கூறுகின்றனர்.
மைதா மாவு, கோவா, தயிர் ஆகியவற்றைப் பதமாகப் பிசைந்து, பின் உலர் உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டை வகைகளை உள்ளே வைத்து உருண்டை பிடிக்கப்படுகிறது. பின், எண்ணெய்யை மிதமான சூட்டில் வைத்துப் பொறித்து எடுத்து, இறுதியாக இனிப்பு பாகில் ஊறவைத்தால் அனைவரின் மனம் கவர்ந்த மக்கன் பேடா தயார் என்கிறார் தயாரிப்பாளர்.
மேலும், தேன் போன்ற சுவையான சர்க்கரைப் பாகில் ஊற வைக்கப்பட்ட ஒரு மக்கன் பேடாவை எடுத்து ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொடுக்கும்போது, அதை வாங்கி ஸ்பூன் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதைச் சாப்பிடும் போது அப்படியே வாயில் கரையும் போது ஏற்படும் சுவையே அலாதிதான். இந்த மக்கன் பேடா வெளியே பார்க்கும் போது கல் போன்று சற்று கடினமாக இருந்தாலும் உள்ளே அத்தனை மென்மை என மக்கன் பேடா குறித்து விளக்குகின்றனர் தயாரிப்பாளர்கள்.
மக்கன் பேடாவின் பிரபல விசிறிகள்: மக்கன் பேடா எந்த அளவிற்கு ரசிகர்களைப் பெற்றுள்ளது எனக் கடை உரிமையாளர் கூறுகையில், “தந்தை பெரியார் எதற்குமே ஆசைப்படமாட்டார் என்று கூறுவார்கள், ஆனால் அப்படிப்பட்ட தந்தை பெரியார் ஆற்காடு பகுதியிலிருந்து யாராவது அவரை சந்திக்கச் சென்றால் அவர் விரும்பி கேட்பது மக்கன் பேடாவை தான்.
ஆற்காட்டில் இருந்து வருகிறீர்களே மக்கன் பேடா வாங்கி வரவில்லையா என்று கேட்பாராம். மக்கன் பேடா வாங்கிச்சென்று கொடுக்கும்போது அதை ரசித்து ருசித்து சாப்பிடுவாராம். இவ்வளவு ஏன், தந்தை பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்கள் பலரும் மக்கன் பேடாவை விரும்பி சுவைத்துள்ளனர்” என்கிறார்.
குறிப்பாக, சென்னையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஆற்காடு புகழ் மக்கன் பேடாவிற்கு மிகுந்த வரவேற்பு உள்ளதாகவும், வேலை நிமித்தமாக இந்த வழியாகச் செல்லும்போது வாகனத்தை நிறுத்தி ஆர்வத்துடன் மக்கன் பேடாவை சுவைக்க வாங்கி செல்வதாகவும் கடையின் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் மக்கன் பேடாவின் விற்பனை களைகட்டி வருவதாகவும், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் தொடர்ந்து ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர்கள் சத்தியவாணிமுத்து, பொன்முடி, பழம்பெரும் நடிகர்கள் எம்.ஆர்.ராதா, பாலையா போன்றவர்கள் ஆற்காடு மக்கன் பேடாவை ருசித்துச் சாப்பிட்டுள்ளனர். மேலும், மறைந்த முன்னாள் அமைச்சர் முகமது ஜான் சென்னைக்குச் செல்லும் போது ஆற்காடு மக்கன் பேடாவை வாங்கிச் சென்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்குக் கொடுப்பாராம்.
மேலும், அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் போன்றவர்கள் கட்சி நிர்வாகிகளையும், உறவினர்களையும் பார்க்கச் செல்லும்போது கண்டிப்பாக மக்கன் பேடாவை வாங்கி செல்கின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கூட ஆற்காடு மக்கன் பேடாவை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இனிப்பு பிரியர்களுக்காக ஆற்காடு மற்றும் அதனைச் சுற்றிச் செயல்படும் 25 கடைகளில் சுமார் 20 ஆயிரம் கிலோ மக்கன் பேடா தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:“ஸ்வீட் எடு, கொண்டாடு”.. தீபாவளியை முன்னிட்டு புதிய ஸ்வீட்ஸ் வகைகள் அறிமுகம்..