ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த கும்பலுக்கு இடையே கடந்த 7ஆம் தேதியன்று மோதல் ஏற்பட்டது.
இதில் அர்சுனன் (26), சூர்யா(26) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் மதன், வல்லரசு, சௌந்தர்ராஜ் ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அரக்கோணம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், வேலூர் சரக டிஐஜி காமினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும் சோகனூர் கிராமத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்கவும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த சோகனூர் மக்கள், தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் சிவகுமாரின் அறிவுறுத்தலின்படி மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சோகனூர் கிராம மக்கள் போராட்டம் மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான பெருமாள் ராஜப்பேட்டையைச் சேர்ந்த புலி (எ) சுரேந்திரன், அஜித், மதன், நந்தகுமார், கார்த்திக், சத்யா, ஆகிய ஆறுபேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் தொகுதி விசிக வேட்பாளர் பனையூர் பாபு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார்.