ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட சுமைதாங்கியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடிய பாமக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இன்று (அக். 2) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவோம். காந்தி பிறந்தநாளான இன்று சுயராஜ்யம்தான் தேவை, அது கிராமங்களில்தான் உள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளம் உள்ளாட்சித் தேர்தலே ஆகும். சட்டப்பேரவையைவிட வலிமையானது கிராமசபை.
பரப்புரையில் பேசிய அன்புமணி தொடர்பான காணொலி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளிக்கும் திமுக, அதிமுக
ஆகையால் நல்லவர்களையும், வலிமையானவர்களையும் தேர்ந்தெடுங்கள். அரை நூற்றாண்டு காலம் உழைத்துதான் ஸ்டாலின், தனது முதலமைச்சர் கனவை நனவாக்கினார். அதேபோல் பாமகவும் தனது கனவை நனவாக்க தற்போது பாடுபடுகிறது.
சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்க பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் எதுவும் மாறவில்லை. மாநில சுயாட்சிக்கு அண்ணா வைத்த கோரிக்கை நியாயமானது. அதனால் பாமக அவரின் கோரிக்கையை வரவேற்கிறது.
கிராம ஊராட்சிகளின் அதிகாரம் சென்னையில் குவிந்துள்ளதுபோல், மாநிலங்களின் அதிகாரம் டெல்லியில் குவிந்துள்ளது. மாநிலப் பட்டியலில் கல்வி இருந்திருந்தால் இன்று நீட் தேர்வு பிரச்சினை வந்திருக்காது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்கள், சமூக நீதிக்கு எதிரானது.
வன்னியர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா சமுதாயத்திற்கும் தனி இட ஒதுக்கீடு தேவை என பாமக போராடுகிறது. வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே ஆதரவளிக்கின்றன” என்றார். இதில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் அமைச்சர் அரங்க வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்