ராணிப்பேட்டை மாவட்டம் கணிகாபுரம் பகுதியில் புதிதாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் உறுப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. மழை காலங்களில் விவசாய நிலங்களுக்கு, பின்னால் உள்ள கோணமலை மற்றும் மாங்குப்பம் மலை ஆகிய இரு மலைகளில் இருந்தும் மழை நீர் வடிவதற்காக சிஎம்சி மருத்துவமனைக்கு முன்பாக காணாறு உள்ளது.
இந்த காணாற்றின் வழியாக மலையில் இருந்து வடிந்து வரும் மழை நீரானது, எதிரேவுள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து வடிகால் வழியாக வெளியேறிவிடும். இந்நிலையில் அந்த காணாற்றின் நீரோட்டத்தை தடை செய்யும் அளவிற்கு பெரும் பரப்பளவை ஆக்கிரமித்து,சிஎம்சி மருத்துவமனை வெளிப்புற கட்டிடத்தை கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் மழை காலங்களில் மழைநீர் போக இடமின்றி, அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி பயிர்களை பாழாக்கி வருவதாக அப்பகுதி விசவாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நிவர் புயலின் காரணமாக கடந்த நவம்பர் 28ஆம் தேதி பெய்த கனமழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும், பயிரிடப்பட்ட நிலக்கடலையும் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது