ராணிப்பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சுகுமாரை ஆதரித்து தற்போதைய அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், வக்பு வாரியத்தின் தலைவருமான முகம்மது ஜான் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் இன்று(மார்ச். 23) காலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
பின்னர் பரப்புரையை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பியவர் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் தேர்தல் பரப்புரைக்குக் கிளம்பினார். அப்போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவரது உடல் அரசு ஆம்புலன்ஸ் மூலமாக ராணிப்பேட்டையில் உள்ள முகமது ஜான் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உறவினர்களும், கட்சி நிர்வாகிகளும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முகமது ஜானின் உடல் இறுதி அஞ்சலிக்குப் பின் நாளை அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 வயதான இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு 1 மகளும், 3 மகன்களும் உள்ளனர். 2011இல் ராணிப்பேட்டைத் தொகுதியின் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக எம்.பி. முகமது ஜான் காலமானார் - எம்.பி. மறைவு
17:29 March 23
ஜெயலலிதா அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2019ஆம் ஆண்டில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் முகமது ஜானின் குடும்பத்தினருக்கு அதிமுக தலைமைக்கழகம் சார்பில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் இணைந்து இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் ஸ்டாலின் : கே.எஸ்.அழகிரி