ராணிப்பேட்டை:காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமம் அருகே உள்ள அசோக் நகர் பழைய காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (55). இவர் கூலித் தொழில் செய்து வந்தார். இவருக்கு கொல்லியம்மாள் மற்றும் மகேஸ்வரி என இரண்டு மனைவிகள். இவர்கள் இருவரும் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர்.
மாரிமுத்து தன் முதல் மனைவி கொல்லியம்மாள் வீட்டில் சில நாட்களும், இரண்டாவது மனைவி மகேஸ்வரி வீட்டில் சில நாட்களும் தங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதேபோல் நேற்று (ஜூலை 4), தனது இரண்டாவது மனைவி மகேஸ்வரி வசிக்கும் அசோக் நகர் பழைய காலனி பகுதிக்கு மாரிமுத்து வந்துள்ளார்.
அப்போது, அதே பகுதியைச் சார்ந்தவரும் மாரிமுத்துவின் உறவினருமான பிச்சைமுத்து என்பவர், மாரிமுத்துவின் வீட்டின் அருகே இரண்டு அடுக்குமாடி வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில், வீட்டின் கட்டுமானப் பணியின்போது சிமெண்ட் மற்றும் செங்கல் துண்டுகள் மாரிமுத்து வீட்டின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாரிமுத்துவுக்கும், பிச்சை முத்துவுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இருவரும் தெருவில் சண்டை போட்டுக் கொண்டனர். பிச்சைமுத்துவுக்கு ஆதரவாக அவரது மனைவி ஏகவள்ளி இணைந்து மாரிமுத்துவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆத்திரத்தில் பிச்சைமுத்துவும், ஏகவள்ளியும் சேர்ந்து மாரிமுத்துவை மண்வெட்டியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.