ராணிப்பேட்டை:ஆற்காடு பகுதியில் APR சிட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், புளிரம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ்பிரியன் (22) மற்றும் ஊழியர் பிரபாகரன் (41). இவர்கள் இருவரும் நேற்று (ஜூன் 16) இரவு நிதி நிறுவனத்தில் வசூலிக்கப்பட்ட சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை, ஆற்காட்டில் இருந்து செய்யார் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், வசூலிக்கப்பட்ட பணத்தை ஒப்படைப்பதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது கலவை அடுத்த முள்ளுவாடி அருகே உள்ள தனியார் வேளாண் கல்லூரி பகுதியில், 4 பேர் கொண்ட மர்ம கும்பல், APR சிட்ஸ் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி, கத்தி முனையில் அவர்களை மிரட்டி, அவர்கள் கொண்டு சென்ற 16 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை அவர்களிடமிருந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக APR நிதி நிறுவன மேலாளர் தமிழ்பிரியன் இன்று (ஜூன் 17) காலை கலவை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து DSP பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ஆய்வாளர் காண்டீப்பன் உட்பட போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு விசாரணை செய்தனர்.