ராமநாதபுரம்: முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பாண்டியிடம் தோல்வியை தழுவினார். தற்போது 2021 தேர்தலில் மீண்டும் முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சீர்மரபினர் வசிக்கும் பெரும்பாலான கிராமங்களில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள், தெருக்கள், ஊர் எல்லையில் கறுப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி வெள்ளிக்கிழமை ஆனையூர் கிராமத்தில் தனது குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை செய்து, முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மருதுபாண்டியர்கள், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.