ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 1914ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்ல ரயில் பாலம் அமைக்கப்பட்டது. தற்போது 106 ஆண்டுகள் கடந்து, அந்த பாலம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், அதற்கு ரூ.525 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதே போன்று, ராமேஸ்வரத்தில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்திய ரயில்வே வாரிய உள்கட்டமைப்பு உறுப்பினர் ரூப் நாராயண் சுந்தர் மற்றும் அதிகாரிகள் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, பாம்பனில் அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பாலப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.