அதிமுகவில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது. இதுகுறித்து ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் குறித்து யாரும் பொதுவெளியில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும், மீறி தெரிவிப்போர் மீது உரிய நடவடிக்கை கட்சி சார்பாக எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி சற்று ஓய்ந்திருந்தது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.22) நடந்தது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் அதிமுகவில் மட்டுமல்ல திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளிலும் கூட கடந்த காலங்களில் இருந்தது.